ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வணிக வாய்ப்புக்கான சூழலை வளர்க்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
வணிகங்களுக்கு ஒழுங்குமுறை சூழலை மிகவும் உகந்ததாக மாற்றும் நோக்கமாகக் கொண்ட, வணிகம் செய்வதை எளிமைப்படுத்துதல் (Ease of Doing Business-EoDB) கட்டமைப்பின் கீழ், புகார்களை குறைப்பது, கட்டுப்பாடுகளை நீக்குவது ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் ஜம்முவில் நடைபெற்றது.
பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (MSME) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அமைச்சரவைச் செயலகம் இந்த உயர்மட்டக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “தேவையற்ற விதிமுறைகளை நீக்குதல், சுமைகளைக் குறைத்தல், குறிப்பாக MSME-களுக்கு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளை ஊக்குவித்தல் மற்றும் தேவையான இடங்களில் வணிகச் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள செயல் திட்டங்களில் பெரும்பாலானவை ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலக்கெடுவைக் கொண்டவை. இந்த காலக்கெடுவுக்குள் நாம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிறிய, அடையக்கூடிய முன்னேற்றத்தை இலக்காக வைத்து செயல்பட வேண்டும். இதில், தாமதம் ஏற்படுமானால், அதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.
இறுதி செய்யப்பட்ட செயல் திட்டங்கள் MIS போர்ட்டலில் உடனடியாக பதிவேற்றப்பட வேண்டும். செயல்படுத்துதல் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும். சீர்திருத்தங்களின் முன்னேற்றம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் மதிப்பீடு செய்யப்படும். வணிக வாய்ப்புக்கான சூழலை வளர்ப்பதற்கும் பல்வேறு துறைகளில் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.