புதுடெல்லி,
டெல்லியில் சமீபத்தில், சீலாம்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியது, அந்த பகுதியில் பெண் தாதாவாக உலா வந்த ஜிக்ரா என்பவர் என தெரிய வந்தது. ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.
2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் ஈடுபட்டனர். இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில் மீது தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என ஜிக்ரா நினைத்துள்ளார்.
இதனாலேயே குணால் கொல்லப்பட்டு உள்ளார். ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக செயல்பட்டு வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டியும் வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார்.
ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.