கர்நாடகாவில் பிரபலமான நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராயை (35) மர்ம நபர்கள் சிலர் நேற்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை ஆட்டிப்படைத்த நிழலுலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்றவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர் முத்தப்பா ராய். மங்களூருவை சேர்ந்த தாதாவான இவர் 1980-களில் மும்பை மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் ரவுடியிசத்தில் ஈடுபட்டிருந்தார். 1990-களின் இறுதிவரை கர்நாடகாவின் பெரும்பாலானா மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட முத்தப்பா ராய் கடந்த 2022-ம் ஆண்டு காலமானார்.
முத்தப்பா ராயின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் ரிக்கி ராய் (35) தனது தந்தையின் தொழில்களை கவனித்து வந்தார். பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரிக்கி ராய் தனது பாதுகாவலர்களுடன் பிடதியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் புறப்பட்டார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ரிக்கி ராயும், அவரது பாதுகாவலர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக பெங்களூரு கொண்டுவரப்பட்ட அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ரிக்கி ராயின் ஓட்டுநர் பசவராஜ் கூறுகையில், ” இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதன் பின்னணியில் முத்தப்பா ராயின் கூட்டாளி ரிகேஷ் மள்ளி, இரண்டாவது மனைவி அனுராதா, தொழிலதிபர் நிதேஷ் ஷெட்டி ஆகியோர் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த தகவலை போலீஸாரிடமும் கூறியுள்ளோம். மருத்துவர்கள் ரிக்கி ராய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்”என்றார்.
இதுகுறித்து பிடதி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக சம்பவம் நடந்த, பண்ணை வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்தப்பா ராயின் கூட்டாளி ரிகேஷ் மள்ளி, இரண்டாவது மனைவி அனுராதா, தொழிலதிபர்கள் நிதேஷ் ஷெட்டி, வைத்தியநாதன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.