சென்னை: “இன்னும் சில மாதங்களில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடையும். அப்போது திமுக கூட்டணியில் பிளவினை ஏற்படுத்த வேண்டு்ம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதற்கு விசிகவைத் துருப்புச் சீட்டாக ஆக்க பார்க்கிறார்கள்.” என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களை எச்சரித்துள்ளார். மேலும் அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் முகநூல் நேரலையில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லோரும் தேர்தலுக்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாஜக பாசிச அரசு மெல்ல மெல்ல சாதுரியமாக காய்களை நகர்த்தி புரட்சியாளர் அம்பேத்கரால் வகுத்தளிக்கப்பட்ட அரசியமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் இதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்த முடியாது.
தமிழ்நாட்டு அரசியலில் தேவையற்ற விவாதத்தை உருவாக்குகிறார்கள். சாதிய, மதவாத சக்திகளை ஊக்குவிக்கிறார்கள், உதிரிகளை ஊக்குவிக்கிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்துகளை முன்வைத்தோமானால், நாம் திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டுமே நம்பிக்கிடக்கிறோம் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான கருத்துக்களை உதிரிகளைக் கொண்டு முன்வைக்கிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்கத் தோழர்கள் அதில் ஒருத்தெளிவைப் பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்தமுடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூட்டணிக்காக கதவை திறந்து வைப்பது என்பது ஒன்றும் ராஜதந்திரம் இல்லை. அது சந்தர்ப்பவாத அரசியல்.
இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அவதூறு பரப்புகிறார்கள் அதை நாம் பொருட்படுத்தவில்லை. ஈடுபாடு காட்டவில்லை. எதிர்பார்ப்பு நிபந்தனை இல்லாமல் கூட்டணியில் இருக்க துணிச்சல், தொலைநோக்கு பார்வை வேண்டும். அதெல்லாம் வாய்க்கப்பெறாதவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவதூறு பரப்புகிறார்கள்
விடுதலைசிறுத்தைகள் கட்சி பிற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் முன்மாதிரியாக இயங்கி வருவதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதனை உண்மையாக்குவோம். அனைவரும் சொல்வதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்று ஏதேனும் கருத்துக்களைச் சொல்லி அந்த சதிக்குள் தொண்டர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது.
அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் கருத்து மற்றும் போக்கினை அறிந்து தொண்டர்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் கூட இல்லை. இன்னும் சில மாதங்களில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடையும். அப்போது திமுக கூட்டணியில் பிளவினை ஏற்படுத்த வேண்டு்ம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதற்கு விசிகவைத் துருப்புச் சீட்டாக ஆக்க பார்க்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.