ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 20) சண்டிகரின் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பகல் ஆட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டி 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரயான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர். 42 ரன்கள் எடுத்த நிலையில், பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரையும் குர்னால் பாண்டியாவே வீழ்த்தினார்.
இதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6, நேகல் வதேரா 5, ஸ்டோனிஸ் 1 என ஆட்டமிழந்தனர். ஜோஸ் இங்கிலிஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மார்கோ யான்சன் மற்றும் ஷஷாங்க் சிங் அணிக்கு ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்தது. யான்சன் 25, ஷஷாங்க் 31 ரன்களையும் எடுத்திருந்தனர். பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. தொடக்க வீரரான ஃபில் சால்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தேவ்தட் படிக்கல் – விராட் கோலியுடன் கைக்கோர்த்து சிறப்பாக விளையாடினார். இந்த கூட்டணி வெற்றிக்கு வழிவகுத்தது. 100 ரன்களை கடந்த இந்த கூட்டணியை ப்ரார் பிரித்தார். தேவ்தட் படிக்கல் 61 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து களத்தில் இருந்த கோலி போட்டியை முடித்து வைத்தார். 18.5 ஓவர்கள் 159 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி தனது 5வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 3வது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி இந்த தோல்வியால் 4வது இடத்திற்கு சென்றது.
மேலும் படிங்க: ஐபிஎல் விளையாட… ‘சிறுவன்’ சூர்யவன்ஷி தியாகம் செய்த உணவுகள் என்னென்ன?
மேலும் படிங்க: இனி சென்னை அணியில் அஸ்வினிற்கு வாய்ப்பு இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!