போபால்: மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஹிர்ஹானி கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியிரான நவீன் பிரதாப் சிங்கின் வீடியோ வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலானது. இந்த வீடியோ குறித்து அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திலிப் குமார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வீடியோ பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து வீடியோவில் மாணவர்களுக்கு மது வழங்கும் ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என்று கண்டுபிடிக்கப்பட்டது.” என்று தெரிவித்தனர்.
உடனடியாக, தவறான நடத்தை, குழந்தைகளை மது குடிக்க ஊக்குவித்தல், ஆசிரியர்களின் கண்ணியத்துக்கு எதிராக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், மத்திய பிரதேச குடிமைப் பணி (நடத்தைகள்) விதிகளின் கீழ் ஆசிரியர் நவீன் பிரதாப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்திருக்கும் நபர், சிறுவர்களுக்கு மதுபானம் வழங்குவது பதிவாகியுள்ளது. மேலும் அதனைக் குடிப்பதற்கு முன்பு தண்ணீர் கலக்க வேண்டும் என்று அந்நபர் செல்வதும் கேட்க முடிகிறது.