18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 20) தொடரின் 38வது லீக் ஆட்டம் மும்பை வான்கடேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். ஆனால் நல்ல தொடக்கத்தை இந்த கூட்டணியால் கொடுக்க முடியவில்லை. ரச்சின் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஷேக் ரஷீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களத்திற்கு வந்த 17 வயது இளம் வீரர் ஆயூஸ் மாத்ரே அதிரடியாக விளையாடி 32 ரன்களை சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜடேஜா மற்றும் சிவம் துபே களத்தில் நிலைத்து நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதத்தையும் அடித்தனர். 20 ஒவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ரிக்கில்டன் மட்டும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் போட்டியை 15.4 ஓவர்களில் முடித்து வைத்தனர். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்க முடியாமல் திணறினர். ரோகித் சர்மா 74 மற்றும் சூர்யகுமார் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேலும் படிங்க: மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!
மேலும் படிங்க: பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!