மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் துரையின் இந்த முடிவு மதிமுக-வுக்குள் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.
மகனின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆனால், இதெல்லாமே மல்லை சத்யாவை வெளியேற்றுவதற்காக நடக்கும் ஒத்திகை என்கிறார்கள் நடுநிலையான மதிமுக-வினர். திமுக-வில் வாரிசு அரசியல் நடப்பதாகச் சொல்லி மதிமுக-வை உருவாக்கிய வைகோ, “எக்காலத்திலும் என் மகனோ, என் தம்பியோ தாயகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். இது எனது அம்மாவின் மீது ஆணை… பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணை” என்று சொன்னார்.
ஆனால் அதே வைகோ, தனது உடல் நிலையைக் காரணம் காட்டி மெல்ல மெல்ல கட்சி நிர்வாகிகள் மூலமே மகனை கட்சியின் முதன்மைச் செயலாளராக கொண்டு வந்து தற்போது எம்பி-யும் ஆக்கிவிட்டார். “இதில் தனது விருப்பம் ஏதுமில்லை… எல்லாம் கழகத் தோழர்கள் எடுத்த முடிவு” என கலைஞர் பாணியில் வைகோ சொல்லலாம். ஆனால், அவர் விரும்பினாரோ இல்லையோ… துரையின் கைக்குள் மதிமுக வரவேண்டும் என வைகோவின் குடும்பத்தில் இருப்பவர்கள் விரும்பியதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து இன்னும் விரிவாக நம்மிடம் பேசிய மதிமுக தோழர்கள் சிலர், “2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை மீண்டும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்திக்கு கொடுக்க திமுக தலைமை தயாராகவே இருந்தது. இதற்காக டி.ஆர்.பாலு மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வைத்திருந்தார் கணேசமூர்த்தி. ஸ்டாலினும், ஈரோடு திமுக-வில் விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துவிட்டு, ’மீண்டும் கணேசமூர்த்தியே நின்றால் எப்படி இருக்கும்?’ என அவர்களிடம் கேட்டிருக்கிறார். “அவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்” என திமுக-வினரும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், துரை வைகோவை திருச்சியில் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஈரோட்டை வாங்காமல் விட்டுவிட்டார்கள். அந்த வருத்தம் காரணமாக வாடிப் போயிருந்த கணேசமூர்த்தியின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதிமுக-வுக்கு கட்சி அலுவலகம் இருக்கிறது. கணேசமூர்த்தி தான் முதன் முதலில் ஈரோட்டில் மதிமுக-வுக்கு கட்சி அலுவலகம் வாங்கினார். ஆனால், அவர் இறந்த பிறகு அந்த அலுவலகத்தில் இருந்த, அவருக்காக தரப்பட்ட நினைவுப் பரிசுகளை அங்கிருந்து எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
மதிமுக தலைமையகமான தாயகம் உருவான போது, செஞ்சியார், மு.கண்ணப்பன், பொன்முத்து, எல்.கணேசன் போன்றவர்கள் எல்லாம் மதிமுக-வில் இருந்தார்கள். அதனால் தாயகம் திறப்பு விழா கல்வெட்டில் அவர்களது பெயர்களும் இருந்தன. இப்போது அந்தக் கல்வெட்டு போன இடம் தெரியவில்லை. இப்படி தடயங்களை அழிப்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனை காலி செய்வதற்கு அவைத் தலைவர் துரைசாமியைக் கொண்டு வந்தார்கள். அவரை காலி செய்ய அவருக்கு நெருக்கமான கணேசமூர்த்தியை ஊக்குவித்தார்கள். கடைசியில் கணேசமூர்த்தியும் இல்லாமல் போய்விட்டார். இதேபோல் மதுரையில் வைகோவின் ஃபீல்டு மார்ஷலாக இருந்த பொன்.முத்துராமலிங்கத்துக்கு எதிராக அவரது விசுவாசிகளான இளவரசன், நாச்சியப்பன், சின்னச் செல்லம், புலவர் செவந்தியப்பன் ஆகியோரை கொம்பு சீவினார்கள்.
செஞ்சி ராமச்சந்திரனை செல்லாக்காசாக்க அவரது விசுவாசியான மாசிலாமணியையும், அவரை மட்டம் தட்ட ஏ.கே.மணியையும் உருவாக்கி வளர்த்தார்கள். இப்படி கட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த பலரையும் மதிமுக-வை விட்டு ஓரங்கட்ட ஆளுக்கொரு உத்தியைக் கையாண்டார்கள்.
ஆனால், இவர்கள் எல்லாம் திமுக-விலிருந்து மதிமுக-வுக்கு வந்தவர்கள். மல்லை சத்யா அப்படியல்ல… மதுராந்தகம் ஆறுமுகத்தின் பாதுகாப்புப் படையில் இருந்த மல்லை சத்யா, மதிமுக தொடங்கிய போதே வைகோ பின்னால் வந்தவர். அப்படிப்பட்டவர் இப்போது ஒரு சிலரது கண்களை உறுத்துகிறார்” என்று சொன்னார்கள்.
அண்மையில் சென்னையில் மதிமுக நிர்வாகி ஒருவர் வைத்த பேனரில், வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யாவின் படத்தைப் போட்டிருக்கிறார். இந்த நிலையில், மதிமுக தொழிற்சங்கமான எம்எல்எஃப் நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் மல்லை சத்யா கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நேருக்கு நேராகவே குற்றம் சாட்டினாராம் துரை வைகோ.
இதையடுத்து, தன்னைச் சங்கடப்படுத்தும் விதமாக யாரும் பதிவுகளைப் போட வேண்டாம் என சமூக ஊடகத்தில் வேண்டுகோள் விடுத்தார் சத்யா. அதேசமயம், ‘வைகோ, துரை வைகோ அவருக்குப் பின்னால் வருண் வைகோவை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் மட்டும் கட்சியில் இருக்கலாம். இதை ஏற்கமுடியாதவர்கள் வெளியேறலாம்’ என துரை வைகோ விசுவாசி ஒருவர் பதிவு ஒன்றைப் போட்டார்.
இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் பரமேஸ்வரன் மல்லை சத்யாவுக்கு ஆதரவாக போட்ட பதிவில், ‘முடிந்தால் நீக்கிப் பார்’ என்ற தொனியில் வைகோவையும், துரை வைகோவையும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருக்கிறார். இதையடுத்து, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான புதூர் பூமிநாதனை தொடர்பு கொண்டவர்கள், பரமேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் போடச் சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
துரை வைகோ சிபாரிசில் எம்எல்ஏ-வாகி இருக்கும் பூமிநாதன், கடந்த 18-ம் தேதி மாவட்டக் கழகக் கூட்டத்தைக் கூட்டி, பரமேஸ்வரனை நீக்க தீர்மானம் போட்டு அனுப்பி இருக்கிறார். ஆனால், பரமேஸ்வரனை மட்டுமல்லாது மல்லை சத்யாவையும் நீக்க பூமிநாதன் தீர்மானம் போடுவார் என எதிர்பார்த்ததாம் துரை வைகோ தரப்பு.
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் சத்யாவுக்கு ஆதரவு என்பதைவிட அவருக்கான அனுதாப அலையாக மதிமுக-வுக்குள் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த அலையானது கட்சிக்குள் புயலை உண்டாக்கலாம். இன்றைய நிர்வாகக் குழுவில் இது பிரச்சினையாக வெடிக்கலாம். இதையெல்லாம் நீர்த்துப் போகச் செய்யவே பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ ஸ்டண்ட் அடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் “செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்” என்று சொல்லி உதயசூரியனில் போட்டியிட மறுத்தவர் துரை வைகோ. இது அப்போது திமுக-வினரை முகம்சுளிக்க வைத்தது. அப்படி இருக்கையில், 2026-ல் மதிமுக-வுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் செயல்திட்டம் வைத்துள்ளேன் என்கிறார் துரை வைகோ.
இதையும் சுட்டிக்காட்டும் மதிமுக நிர்வாகிகள் சிலர், “குறைந்தது 8 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொது சின்னம் கிடைக்கும். அதன் பிறகு அந்தத் தொகுதிகளில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும். கடந்த முறை திமுக, 6 தொகுதிகளை மதிமுக-வுக்கு தந்தது. அதில் 4 தொகுதிகளில் வெல்லமுடிந்தது. இம்முறையும் திமுக அதற்கு மேல் தர வாய்ப்பில்லை.
அப்படி இருக்க, மதிமுக எப்படி 8 தொகுதிகளில் போட்டியிட முடியும்? ஜெயிக்கும் வாய்ப்பைப் பறிகொடுக்கும் விதமாக வேறு கூட்டணியில் போட்டியிட்டால் அது கட்சிக்குள் மற்றவர்களின் வளர்ச்சியை முடக்குவதாகவே அமையும். அதைத் தான் துரை வைகோ விரும்புகிறாரோ என்னவோ” என்கிறார்கள்.
1993-ல் திமுக-வில் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, “நான் நீதி கேட்கிறேன்” என புரட்சிப் புயலாகப் புறப்பட்டார் வைகோ. அப்போது அவருக்கு இருந்த எழுச்சியை அடக்குவதற்காக, “நான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். நீங்களே யாராவது கட்சி தலைவராக இருந்து கொள்ளுங்கள்” என பதிலுக்கு கருணாநிதியும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கருணாநிதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்துடன், வைகோவுக்கு எதிராகவும் அறிக்கைகள் பறந்தன. இதையடுத்து, தலைவர் பதவி விலகல் முடிவை வாபஸ் பெற்றார் கருணாநிதி. இதன் தொடர்ச்சியாக, வைகோவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முதல் தீர்மானத்தை சிவகங்கை மாவட்ட திமுக-வில் தா.கிருட்டிணன் நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல மாவட்டங்களும் இதை வழிமொழிந்தன.
அதேபோல் துரை வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டக் கழகங்கள் வரிசையாக இனி தீர்மானங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். அதேசமயம், “எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் வைகோ-வுக்கோ மதிமுக-வுக்கோ எத்தகைய ஊறும் செய்யமாட்டேன்” என்று சொல்லும் மல்லை சத்யா, துரையைப் போல் தாமாக முன் வந்து பொறுப்பிலிருந்தோ கட்சியிலிருந்தோ விலகும் முடிவை எடுக்க மாட்டார் என்கிறார்கள்.
கட்சிக்காக தனது பாட்டியும் தாய்மாமன் மகனும் இன்னுயிர் தந்திருப்பதாக தன்னுடைய பொறுப்பு விலகல் அறிக்கையில் ஆதங்கப்பட்டிருக்கிறார் துரை வைகோ. இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால், வாரிசு அரசியலை எதிர்த்து வாளேந்தி புறப்பட்ட வைகோவுக்காக தீக்குளித்து மடிந்த இடிமழை உதயன் உள்ளிட்ட அறுவரின் உயிர் தியாகமும் அர்த்தமற்றதாகி விடும் போலிருக்கிறதே… அதைப்பற்றி கவலைப்படப் போவது யார்?