நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளை விளையாடி உள்ள நிலையில், குஜராத், டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளன. அதேபோல், சில வீரர்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனும் உள்ளனர்.
அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் மேக்ஸ்வெல் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 110 ரன்கள் மற்றும் 4 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல் லிவிங்ஸ்டோன் 7 போட்டிகளில் 87 ரன்கள் எடுத்தார். இந்த மோசமான விளையாட்டின் காரணமாக கடந்த போட்டிகளில் இருவரையும் பிளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்பஸில் பேசிய விரேந்தர் சேவாக், மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனின் பசி நீங்கிவிட்டது போல் உணர்கிறேன். அவர்கள் இருவரும் இங்கு விடுமுறைக்காக வந்து இருக்கிறார்கள். போட்டியை வேடிக்கை பார்த்திவிட்டு வெளியேறுகிறார்கள். அணிக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை. ஐபிஎல் டிராபியை வெல்ல வேண்டும் என்ற ஆசை இல்லை என கடுமையாக சாடி உள்ளார்.
மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனின் செயல்பாடு மோசமாக இருந்த காரணத்தால், அவர்களை தற்போது பிளேயிங் 11ல் இருந்து நீக்கி உள்ளனர். வரும் போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். க்ளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் ரூ. 4 கோடிக்கு வாங்கப்பட்டதும், லிவிங்ஸ்டோன் ஆர்சிபி அணியால் ரூ. 8.75 கோடிக்கும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!
மேலும் படிங்க: ஐபிஎல் விளையாட… ‘சிறுவன்’ சூர்யவன்ஷி தியாகம் செய்த உணவுகள் என்னென்ன?