டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.