Ayush Mhatre: 2 சிக்சர்; 4 பவுண்டரி – 213 SR -ல் பவர் காட்டிய 17 வயது ஆயுஷ்'; இவரை விட்றாதீங்க CSK

‘ஆயுஷ் அறிமுகம்!’

வான்கடேவில் மும்பைக்கு எதிராக சென்னை அணி ஆடி வரும் ஆட்டத்தில் சென்னை சார்பில் ஆயுஷ் மாத்ரே எனும் 17 வயது இளம் வீரர் அறிமுகமாகி சிறப்பாக ஆடிவிட்டு சென்றிருக்கிறார்.

Ayush Mhatre
Ayush. Mhatre

‘பின்னணி!’

ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் மும்பையை சேர்ந்த 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருந்தது. இன்று மும்பையில் மும்பைக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில் அவரை லெவனுக்குள்ளும் சென்னை அணி எடுத்திருந்தது. இதுவே ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. ஏனெனில், சென்னை அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பே அளிக்காது. அப்படியே அளிக்க நினைத்தாலும் பல சீசன்களாக பென்ச்சில் வைத்துவிட்டு வேறு வழியே இல்லாத சமயத்தில்தான் வாய்ப்பளிக்கும்.

‘சென்னையின் இளம் வீரர்!’

ஆயுஷ் மாத்ரே மட்டும்தான் சென்னையின் முகாமுக்குள் வந்த ஒன்றிரண்டு வாரத்துக்குள்ளேயே லெவனில் இடம்பிடித்த முதல் இளம் வீரர் என நினைக்கிறேன். மேலும், சென்னை அணிக்காக அறிமுகமான மிக இளம் வயது வீரரும் இவர்தான்.

Ayush Mhatre
Ayush Mhatre

சென்னை அணியில் ஒரு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு அரிது என்பது ஆயுஷ் மாத்ரேவுக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் வாய்ப்பின் அருமையை உணர்ந்து முதல் போட்டியிலேயே நன்றாக ஆடியிருந்தார். எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே அட்டகாசமான ஸ்ட்ரைட் ட்ரைவ்வில் ஒரு பவுண்டரி. அடுத்து லெக் ஸ்டம்ப் லைனில் பேடுக்குள் வந்த பந்தை மிட்விக்கெட்டில் ப்ளிக் ஆக்கி ஒரு சிக்சர்.

அடுத்த பந்து ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரி. அதையும் அவரின் இன்ஸ்பிரேஷனான ரோஹித்தை போல மடக்கி சிக்சராக்கினார். பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டான தீபக் சஹாரின் ஓவரில் மட்டும் க்ளீன் ஹிட்டாக 3 பவுண்டரிகள். சென்னை அணிக்கு நம்பர் 3 இல் இதுவரைக்கும் கிடைக்காமல் இருந்த மொமண்டம் ஆயுஷ் மூலம் கிடைத்தது.

32 ரன்களை எடுத்திருந்த நிலையில் தீபக் சஹாரின் பந்திலேயே அவுட்டும் ஆனார். பெரிய இன்னிங்ஸ் இல்லைதான். ஆனாலும் நல்ல அறிமுகம். தோனியின் பாணியில் சொல்ல வேண்டுமெனில் ஸ்பார்க் காட்டியிருக்கிறார். கடந்த 7 போட்டிகளிலும் சேர்த்தே சிஎஸ்கே பவர்ப்ளேயில் 3 சிக்சர்களைத்தான் அடித்திருந்தது. ஆனால், இன்று மாத்ரே மட்டுமே பவர்ப்ளேயில் இரண்டு சிக்சர்களை அடித்திருந்தார்.

ஆயுஷ் மாத்ரே
ஆயுஷ் மாத்ரே

இவரை சிஎஸ்கே அணி விட்டுவிடக் கூடாது. போதிய வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் ஸ்டாராக உயர்வதற்கான ஒளி அவரிடம் தெரிகிறது. வழக்கம்போல விட்றாதீங்க சிஎஸ்கே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.