ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ திரைப்படம் இப்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது .
படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இப்போதும் ரீ ரிலீஸில் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

‘கில்லி’ படத்தின் ரீ ரிலீஸைத் தொடர்ந்து ‘சச்சின்’ படத்தின் ரீ ரிலீஸுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.
‘சச்சின்’ திரைப்படம் எப்படி உருவானது? படப்பிடிப்பு சமயத்தில் நேர்ந்த சுனாமி பேரிடர், சந்தானம் விலகிய கதை, படத்திற்கு வந்த தடை போன்ற பலரும் அறிந்திடாத விஷயங்களை ஆனந்த விகடனின் வெளியான ‘உண்மைகள் சொல்வேன்’ தொடரில் தயாரிப்பாளர் தாணு குறிப்பிட்டிருக்கிறார். ‘சச்சின்’ படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
ஒரு நாள், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனைச் சந்திக்கச் சென்றிருந்த தாணு, அங்கு எஸ்.ஏ.சி-யைச் சந்தித்தார்.
உரிமையாக அவர், “என்ன சார், நாங்கெல்லாம் உங்க கண்களுக்கு தெரியவில்லையா?” எனக் கேட்டிருக்கிறார். ‘சச்சின்’ படத்துக்கு முன்பு, தாணு தயாரித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் விஜய்யை நடிக்க வைக்கக் கேட்டிருக்கிறார்.
ஆனால், அப்போது அது நடக்கவில்லை எனவும் தாணு குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு, தாணு விஜய்யைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், “குஷி மாதிரியான ஒரு ஜாலியான படம் செய்யலாம்” என விஜய் சொல்லியிருக்கிறார்.

தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் உறுதியான பிறகு, இருவரும் கதைகளைக் கேட்டிருக்கிறார்கள். முதலில், வி.இஸட்.துரை சொன்ன கதை பிடித்துப்போக, விஜய்க்கு அந்தக் கதையைச் சொல்ல வைத்திருக்கிறார்.
ஆனால், கதையின் இரண்டாம் பாதி விஜய்க்குத் திருப்தியாக இல்லை. இதற்குப் பிறகு, இயக்குநர் ஜான் மகேந்திரனின் கதைக்கு விஜய்யும் தாணுவும் டிக் அடித்திருக்கிறார்கள்.
கதையைத் தேர்வு செய்வதிலும், படத்தின் பாடல்களைக் கவனிப்பது, படத்துக்கான போஸ்டர் மற்றும் விளம்பரங்களைக் கவனிப்பதில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்தான் என இந்தத் தொடரில் தாணு குறிப்பிட்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, படத்தின் அத்தனை விஷயங்களிலும் விஜய் ஈடுபாடு காட்டுவாராம்.
படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் தொடங்கிவிட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் தமிழகக் கரைகளில் சுனாமி பேரிடர் ஏற்பட்டது. படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அனைவருக்காகவும் படக்குழுவினர் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
முதலில், படத்தில் சந்தானம்தான் காமெடிக்கான முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர். திடீரென அவரைத் தவிர்க்க வேண்டிய சூழல் வந்துவிட்டதாகவும் தாணு குறிப்பிட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய பிறகு, திடீரென வடிவேலு, “மனசு சரியில்லை. நான் சென்னைக்குப் போகிறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பிறகு, வேறொரு தேதியில் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் இசையமைத்திருந்த ஒரு பாடலை அனுமதி பெற்று ‘சச்சின்’ படத்தில் சேர்த்துவிட்டார்.
ஆனால், படத்தின் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, “எங்களிடம் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என ஜெமினி லேப் நிறுவனம் படத்துக்கு தடை கேட்டிருக்கிறது.
‘சந்திரமுகி’ படத்தோடு ‘சச்சின்’ திரைப்படமும் வெளியாக வேண்டிய சூழலில், இப்படியான ஒரு பிரச்னை வந்தது.
பாடலின் ட்யூனை மட்டும் மாற்றிவிட்டு படத்தை வெளியிடலாம் என உத்தரவு வந்த பிறகு, படத்தை ரிலீஸுக்கு தயார் செய்திருக்கிறார்கள்.
அன்று இரவோடு இரவாக, பாடலுக்கு வேறொரு ட்யூன் மாற்றிக் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
சொன்ன தேதியில், ‘சந்திரமுகி’ படத்தோடு ‘சச்சின்’ திரைப்படமும் வெளியாகி நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் தாணு குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தில் கிடைத்த லாபத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை விஜய்க்குக் கொடுக்க வேண்டும் என எஸ்.ஏ.சி-யைச் சந்தித்திருக்கிறார் தாணு.
அவர், “ஒரு படம் வெற்றி பெற்று, நல்ல லாபம் வந்திருக்கிறது என்று ஒரு தயாரிப்பாளர் சொல்வதே பத்துப் படம் பண்ணிய மாதிரி சந்தோஷம்.
எங்களுக்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் தர வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் கொடுத்த சம்பளமே போதும்.
நல்லபடியாகப் படத்தை முடித்து, இவ்வளவு பிரச்னைகள் வந்த போதும், சொன்னபடி ரிலீஸ் செய்து, லாபம் வந்திருக்கிறது என்றும் சொல்கிறீர்கள்.
எங்களுக்குப் பெரிய திருப்தி. பணமெல்லாம் வேண்டாம். இந்த விஷயத்தை நிச்சயம் தம்பியிடம் சொல்வேன். நீங்கள் தம்பியோடு நிறைய படங்கள் பண்ண வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.