அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய வான்ஸ் குடும்பத்தினர் திங்கள்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகளுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “டெல்லியில் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் உடனான எனது சந்திப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வேகமான முன்னேற்றத்தை நாங்கள் இருவரும் மதிப்பாய்வு செய்தோம். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது மக்கள் மற்றும் உலகின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டின் வரையறுக்கும் கூட்டாண்மையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Pleased to welcome US @VP @JDVance and his family in New Delhi. We reviewed the fast-paced progress following my visit to the US and meeting with President Trump. We are committed to mutually beneficial cooperation, including in trade, technology, defence, energy and… pic.twitter.com/LRNmodIZLB
— Narendra Modi (@narendramodi) April 21, 2025