வாஷிங்டன்,
2 நாட்கள் பயணமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்சியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது,
மராட்டிய சட்டசபை தேர்தலில் மோசடி நடந்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையம் மாலை 5.30 மணிக்கு வாக்களித்தோர் எண்ணிக்கை விவரத்தை அளித்தது. அதன்பின்னர் மாலை 5.30 முதல் 7.30 மணிவரை 65 லட்சம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விவரம் கொடுத்துள்ளது.
இது நடைமுறையில் சாத்தியமற்றது. ஒரு வாக்காளர் வாக்களிக்க குறைந்தது 3 நிமிடங்கள் ஆகும். அவ்வாறு கணக்கிடும்போது நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று இவ்வளவு வாக்குகள் பதிவாக நள்ளிரவு 2 மணிவரை ஆகும்.
இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை நாங்கள் கேட்டபோது அவர்கள் கொடுக்கவில்லை. மேலும், வீடியோ ஆதாரங்களை கேட்கும் அதிகாரத்தையும் மறுக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளனர். இது இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. அமைப்பில் ஏதோ பிரச்சினை உள்ளது. இதைநான் பல முறை கூறிவிட்டேன்’ என்றார்.