இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்: மாணவர்களிடம் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்துக்கும், தமிழுக்கும் எதிராக சூழ்ச்சி நடப்பதாகவும், இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் 1000 இருக்கைகள் வசதியுடன் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து கலையரங்கை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இக்கல்லூரியில் 1986-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியபோது, “இந்த சிறிய அறையில் நிறைய மாணவர்கள் திணித்துக்கொண்டு நிற்கிறீர்கள். அதனால், காற்று உள்ளே வரமுடியவில்லை.

நான் பேசிமுடித்தவுடன் நீங்கள் கலைந்து சென்றுவிடுவீர்கள் என்பதால், இந்த திணிப்பு அரை மணி நேரத்தில் விலகிவிடும். ஆனால், இந்தித்திணிப்பு எப்போது விலகும்” எனக்கேட்டார். கருணாநிதி கேட்ட அந்தக்கேள்வி இன்றைக்கும் நமக்கு பொருத்தமாக இருக்கிறது. அதற்கான விடையை, நமது முதல்வரின் காலத்தில், நாம் நிச்சயம் பெறுவோம்.

தமிழகம் என்பதற்கு அடிப்படையே தமிழ் தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் 1965-ல் ஏற்பட்ட மாணவர்களுடைய எழுச்சி தான் முக்கிய காரணம். அந்த மாணவர்கள் போராட்டம் தான் இந்தி திணிப்பை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது.

இவ்வாறு போராடிய உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் தரக்கூடிய கூடிய ஒரே பரிசு, “எங்களுடைய காலத்தில் நாங்களும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதில் உறுதியாக இருப்போம்” என வாக்குறுதி கொடுப்பதுதான். பொதுவாகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தலைவர்கள் விரும்பியதில்லை.

ஆனால் இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல தொந்தரவுகளை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கும், தமிழுக்கும் எதிரான சூழ்ச்சிகளை மாணவர்கள் வீழ்த்த வேண்டும். இந்த சூழ்ச்சிகளை மாணவர்கள் சரியாக புரிந்துகொண்டால் என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, க.கணபதி, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.