மதுரை: உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட அனுமதி வழங்கியும், கோயில் தல விருட்ச வழிபாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயில் மற்றும் கோயில் திருவிழாவை நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டில் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கோயில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டது. இதனால் உத்தபுரம் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களை திறக்கவும், பூஜைகள் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவின் பேரில் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு சமூகத்தினர் சார்பில் உத்தபுரம் கோயிலில் அனைவரும் சம உரிமையுடன் கோயிலில் வழிபடுவோம், தல விருட்ச மரத்தைக் வழிபடும் விவகாரத்திலும் புதிய முறைகளை புகுத்த மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பிரச்சினை ஏற்படும் போது சுவர் எழுப்பி தடுத்தால் பிரச்சினை தீர்ந்து விடாது. மனங்கள் இணைந்தால் தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
உத்தபுரம் முத்தாலம்மன் கோயில் வழிபாட்டில் அரசு எந்த தடையாணையும் பிறப்பிக்கக் கூடாது. அனைத்து சமூகத்தினரும் கோயிலில் எந்த வேறுபாடும் இல்லாமல் சாமி தரிசனம் செய்யலாம். அறநிலையத் துறை விதிகளுக்கு உட்பட்டு கோயில் தல விருட்சத்தை யாரும் தொடாமல், சந்தனம் பூசுவது, குங்குமம் வைப்பது, ஆணி அடிப்பது போன்றவற்றை செய்யாமல் வழிபட வேண்டும். இது தொடர்பாக புதிய வழிமுறைகளை உருவாக்கி அதை ஒரு ஆண்டில் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.