புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் ரம்பான் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. செரி பக்னா கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதில் அகிப் அகமது, மொகமது சாகிப் சகோதரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். மேலும், தரம் குந்த் கிராமத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டனர். இந்தப் பகுதியிலும் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
பலத்த மழை மற்றும் வெள்ளம், நிலச்சரிவால் நஷ்ரி, பனிஹால் இடையே ஜம்மு – நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கியுள்ளன. மழை நிற்கும் வரையில் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை பெய்த மழையின் போது மின்னல் தாக்கி ரீஸி அர்னாஸ் பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர். உதம்பூர் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங், பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையான உதவிகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.