மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.
சென்னை அணிக்கு 6-வது தோல்வியாகும். புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி (4 புள்ளி) எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியதுதான். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து தங்களுடைய அணியை கட்டமைக்காததே சிஎஸ்கே-வின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் பெரிய அணி. இளம் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏலத்தில் இருந்தது. இப்போது அவர்களிடம் உள்ள இளம் வீரர்களும் போட்டியை மாற்றுபவர்களாக அசத்தவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணம். இதற்கு திறமையான வீரர்களை கண்டறியும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் பற்றி கேள்வி கேட்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுடைய தேர்வு அப்படி அமைந்துள்ளது” என்று கூறினார்.