டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் வழிபாடு

புதுடெல்லி: 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் 4 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தனர். மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் விமான நிலையத்தில், அவர்களை வரவேற்றார். துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அவர்களுக்கு கோயிலின் கட்டிடக் கலை நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கவனம் ஈர்த்த குழந்தைகளின் உடை: ஜே.டி. வான்ஸ் – உஷா சிலுகுரி தம்பதியரின் 3 குழந்தைகளும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து இந்தியா வந்தனர். இரு மகன்களும் பைஜாமா குர்தா அணிந்திருந்தனர். மகள், அனார்கலி பாணியிலான சிறிய உடையை அணிந்திருந்தார். இந்திய உடைகளில் அவர்கள் வந்திருந்தது காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வழிபாட்டை முடித்துக்கொண்டு அவர்கள் 5 பேரும், கோயிலின் முன்பாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

பிரதமரை சந்திக்கிறார்.. துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இன்று மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஒட்டுமொத்த பாதையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இன்று இரவு விருந்தளிக்கிறார்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு: ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அமெரிக்க துணை அதிபரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு நெறிமுறையின்படி நாங்கள் ஏற்கனவே பயிற்சிகளை நடத்தியுள்ளோம். எல்லாம் சீராக நடைபெறுவதையும், வருகையின் போது எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அந்த அதிகாரி கூறினார். அமெரிக்க துணை அதிபர் செல்லும் பாதைகள் தெளிவாக இருப்பதை டெல்லி போக்குவரத்து காவல்துறையும் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

இன்று இரவு ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு அவர்கள் ராம்பாஹ் பேலஸில் தங்குகின்றனர். நாளை அவர்கள் அமீர் கோட்டையை பார்வையிடுகின்றனர். ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நாளை மாலை இந்திய குழுவினருடன் ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை, வான்ஸ் குடும்பத்தினர் பார்வையிடுகின்றனர். ஷில்ப்கிராம் பகுதியில் உள்ள இந்திய கைவினைப் பொருட்கள் விற்கப்படும் திறந்தவெளி சந்தையையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். 24-ம் தேதி அன்று ஜெய்ப்பூரில் இருந்து ஜே.டி.வான்ஸ் அமெரிக்கா புறப்படுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.