ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதியின் கதையைக் கேட்டால், இமைகள் கண்ணீருக்குள் மூழ்கி விடும். தன்னம்பிக்கையின் பிறப்பிடமாக திகழும் இவர்களின் இருப்பிடமும் இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இரும்பு மனதையும் உருக வைத்து விடும். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் இவர்களை சந்தித்தோம். முதலில் ஜெயலட்சுமி பேசினார்.

“நாலு வயசு இருக்கிறப்போ எனக்கு போலியோ அட்டாக் வந்துச்சு. எல்லார் மாதிரியும் நடக்க முடியாதுன்னு ஆன பிறகும், என் வீட்ல என்னைப் படிக்க வெச்சாங்க. நானும் பி.லிட் முடிச்சிட்டு எம். ஏ, எம்.பில், டிபிடி-னு ஆசிரியராகணும்னு நோக்கத்தோட படிச்சேன். தவிர, நெட் எக்ஸாமும் பாஸ் பண்ணேன். இதுக்கப்புறம் கொஞ்ச காலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல மனு எழுதுற வேலைபார்த்தேன். பிறகு, ஒரு நூலகத்துல தின சம்பளத்திற்கு வேலைபார்த்தேன். தனியார் கல்லூரிகள்ல வேலைக்கு முயற்சி செஞ்சப்போ, நான் நெட் எக்ஸாம்ல பாஸ் பண்ணியிருந்ததால யுஜிசி விதிமுறைபடி சம்பளம் கொடுக்கணும்னு, என்னை வேலைக்கு எடுக்கல.
கோயம்புத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சினு விழுப்புரத்தைச் சுற்றி இருக்கிற அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்ல 12 ஆண்டுகளுக்கும் மேல வேலை தேடிக்கிட்டிருக்கேன். எங்க நேர்முக தேர்வுக்குப் போனாலும் சம்பளத்தைப் பாதியா குறைச்சு கொடுக்கிறதுக்கு பேரம் பேசுறாங்களே தவிர, யாரும் எனக்கு வேலைக் கொடுக்க முன்வரல. சரி, நாம படிச்ச படிப்பு நிச்சயம் ஒருநாள் நம்மள காப்பாத்தும். அதுவரைக்கும் நேரத்தை வீணாக்க வேண்டாம்னு, தமிழ், இங்கிலீஷ் ரெண்டுலேயும் லோயர், ஹையர் டைப்ரைட்டிங் முடிச்சேன். அதையும் டிஸ்டின்க்ஷன்(Distinction)ல பாஸ் பண்ணேன். அதுக்கப்புறமும் எந்த நிறுவனமும் எனக்கு வேலை கொடுக்கல.
அதுக்கு அவங்க சொல்ற காரணம், ‘இந்தக் காலை வெச்சுக்கிட்டு எப்படிம்மா மாடிப்படி ஏறி வேலை வருவீங்க’ அப்படிங்கிறதுதான். ஆனா, இந்தக் கால்களை வெச்சிக்கிட்டுதான் ஸ்கூல், காலேஜ் படியேறி படிச்சேங்க. படியேறி படிக்கத் தெரிஞ்ச எனக்கு, படியேறி பிள்ளைங்களுங்க பாடம் நடத்த முடியாதா? நீங்க எனக்கு கருணை அடிப்படையில வேலை தர வேணாம். தகுதி அடிப்படையில வேலை கொடுத்தா போதும்” என்கிற ஜெயலட்சுமி, கடந்த 9 வருடங்களாக டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கும், நீதிமன்றத்தில் பணிபுரிவதற்கான தேர்விற்கும் முயற்சி செய்து வருகிறாராம்.

”வருமானமும் இல்ல; தங்க வீடும் இல்ல. எத்தனையோ முறை அதிகாரிகளை, அமைச்சர்களை சந்திச்சு மனு கொடுத்துட்டோம். எங்க நிலை மாறவே இல்லீங்க” என்று ஆதங்கப்பட்ட ஜெயலட்சுமியிடம், அவர்களுடைய காதல் திருமணம் பற்றிக் கேட்டோம்.
”ஒருமுறை கலெக்டர் ஆஃபீஸ் வாசல்ல டைப்ரைட்டிங் வேலை செஞ்சிட்டிருந்தப்போ சிலர் என்கிட்ட மரியாதைக்குறைவா நடந்துக்க முயற்சி பண்ணாங்க. அப்போ இவர்தான் எனக்காக பேசினார். அப்போ தான் எங்களுக்குள்ள லவ் ஆரம்பிச்சிது. வீட்ல சொன்னோம். கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க” என்றவரைத் தொடர்ந்து முருகதாஸ் பேச ஆரம்பித்தார்.
“என்னால தவழ்ந்துதான் போக முடியும். அதனால, ஸ்கூலுக்குப்போய் படிக்க முடியல. ஒன்பதாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டேன். அதுக்கப்புறம், நியூஸ் பேப்பர் விற்க ஆரம்பிச்சேன். ஆனா, அதையும் யாராவது என்னை சைக்கிள்ல ஏத்திக்கிட்டு போனா தான் செய்ய முடியும். ஆனா, என்னை யாருமே அழைச்சிட்டுப் போக மாட்டாங்க. கூடப்பிறந்த தம்பிகூட அந்த உதவியை எனக்கு செஞ்சதில்ல. என் வீட்ல எனக்குன்னு தனியா தட்டு, டம்ளர்ன்னு ஒதுக்கி வெச்சுதான் சாப்பாடு போட்டாங்க. கால் இருக்கிற பிள்ளைதான் நாளைபின்ன நம்மளை காப்பாத்தும்கிற எண்ணம் அவங்களுக்கு. ஒருமுறை என்னோட தம்பிக்கு ஃபீஸ் கட்ட அப்பாம்மா காசு கொடுக்கலைன்னு கடன் வாங்கி, உச்சி வெயில்ல தவழ்ந்துபோய் அவனுக்காக ஃபீஸ் கட்டினேன். ஆனா, ஒருகட்டத்துல அவனும் என்னை ஒதுக்கிட்டான்.
எனக்கும் இவங்களுக்கும் சேர்த்து கவர்ன்மென்ட் தர்ற உதவித்தொகை 3 ஆயிரம் ரூபா வருது. இதுதான் எங்களோட ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை.
எப்படியாவது மரியாதையா வாழ்ந்தாகணுமேன்னு சைக்கிள் கடை, மோட்டார் கடை, மெக்கானிக் கடைன்னு வேலைபார்த்தேன். கடன் வாங்கி விவசாயம் பார்த்தேன். அதுலேயும் என்னை ஏமாத்திட்டாங்க. என்னுடைய நிலத்தை ஏமாத்தி வாங்கிட்டாங்க. நான் படிக்காம கஷ்டப்படுறேன். என் மனைவி படிச்சிட்டு கஷ்டப்படுறா. எனக்கும் இவங்களுக்கும் சேர்த்து கவர்ன்மென்ட் தர்ற உதவித்தொகை 3 ஆயிரம் ரூபா வருது.
இதுதான் எங்களோட ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை. இதுல 2 ஆயிரம் ரூபாயை வாடகைக்குக் கொடுத்துட்டு, மிச்சமிருக்கிற ஆயிரம் ரூபாய்லதான் நான், என் மனைவி, எங்களோட அஞ்சு வய மக வெண்மதி மூணு பேரும் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்” என்பவருடைய குரல் கண்ணீருடன் உடைகிறது.

இவர்களுடைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மானிடம் பகிர்ந்தபோது, “அரசு வேலைகள் அனைத்துமே டி.என்.பி.எஸ்.சி-க்கு கீழ்தான் இயங்குகிறது. எனவே, என்னால் அரசு வேலைக்கு உதவ முடியாது. ஆனால், நான் அவர்களை டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்கு உதவுகிறேன். தவிர, தனியார் அலுவலகங்களில் ஜாப் மேளா நடந்தால் இவர்களை பரிந்துரை செய்கிறேன்” என்றார்.