சென்னை: “ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1000 நாட்களைக் கடந்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விஜய் தனது தனது எக்ஸ் பக்கத்தில், “மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!” என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் ஜனவரி 20-ம் தேதியன்று நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.