BCCI Annual Central Contracts: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 2024-25 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் புதுபிக்கப்படும். அந்த வகையில், இந்திய ஆடவர் சீனியர் அணிக்கான 2024-25 ஆண்டு ஒப்பந்த பட்டியல் தற்போது பிசிசிஐ அறிவித்திருக்கிறது. 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 செப்டம்பர் மாதம் வரை இந்த ஒப்பந்த பட்டியல் இருக்கும். பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் A+, A, B, C என மொத்தம் 4 கிரேடுகள் (Grades) வீரர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். இதில் கடந்தாண்டு இருந்த சிலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர், சில வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
BCCI announces annual player retainership 2024-25 – Team India (Senior Men)#TeamIndia
Detailshttps://t.co/lMjl2Ici3P pic.twitter.com/CsJHaLSeho
— BCCI (@BCCI) April 21, 2025
BCCI Central Contracts: A+ வீரர்கள் யார்? எவ்வளவு சம்பளம்?
இந்த 4 கிரேடுகளில் வீரர்களின் சம்பளமும் மாறுபடும். அந்த வகையில், A+ கிரேடில் நான்கு வீரர்களை பிசிசிஐ தக்கவைத்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா ஆகியோர் இந்த A+ பட்டியலில் கடந்தாண்டை போலவே தொடர்கிறார்கள். இவர்களுக்கு தலா 7 கோடி ரூபாய் சம்பளம் ஆகும்.
BCCI Central Contracts: A கிரேடு வீரர்கள் யார்? எவ்வளவு சம்பளம்?
அதேபோல், A கிரேடில், முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் தற்போது இடம்பெற்றுள்ளனர். இந்த A கிரேடில் கடந்தாண்டு அஸ்வின் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் கடந்தாண்டு இறுதியில் ஓய்வை அறிவித்ததால் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு B கிரேடில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட் தற்போது A கிரேடுக்கு புரமோஷன் பெற்றுள்ளார். இந்த A கிரேடு வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் சம்பளம் ஆகும்.
BCCI Central Contracts: B கிரேடு வீரர்கள் யார்? எவ்வளவு சம்பளம்?
B கிரேடு பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது இடம்பெற்றுள்ளார். கடந்தாண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், கடந்தாண்டு உள்ளூர் தொடரிலும் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி பல கோப்பைகளை பெற உதவினார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த இவர், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் முக்கிய வீரராக செயல்பட்டிருந்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்களை அடித்தவரும் இவர்தான். அந்த வகையில், இவரை தற்போது B கிரேடு பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இவருடன் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என மொத்தம் 5 வீரர்கள் B கிரேடில் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் தலா 3 கோடி ரூபாய் ஆகும்.
BCCI Central Contracts: C கிரேடு வீரர்கள் யார் யார்?
இந்த பிரிவில்தான் பல வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்தாண்டு ஒப்பந்தத்தில் ரின்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதார், துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா என 19 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு சம்பளம் தலா 1 கோடி ரூபாய் ஆகும்.
கடந்தாண்டு இந்த பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் ராணா உள்ளிட்ட 8 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இஷான் கிஷன் கடந்தாண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் பெரியளவுக்கு சர்ச்சையானது. தற்போது அவரும் கம்பேக் கொடுத்துள்ளார்.
ஓராண்டில் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 5 டி20ஐ போட்டிகளில் விளையாடினால் அவர்களின் பெயரும் ஒப்பந்த பட்டியலின் சி கிரேடில் சேர்ந்துவிடுவார்கள். இந்த 4 கிரேடுகளில் மொத்தம் 34 வீரர்களை பிசிசிஐ தனது ஒப்பந்த பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.