“முற்போக்கு குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ்!” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “போப் பிரான்சிஸ், இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார்,” என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

போப் பிரான்சிஸ், இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப் பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன.

இரக்கமிகுந்த செயல்கள், மனிதநேயத்தில் நிலைக்கொண்ட மதநம்பிக்கை எனும் வளமான மரபினை அவர் விட்டுச் சென்றுள்ளார். அன்னாரது மறைவினால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.