யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்!

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு இது…

பல நூற்றாண்டுகள் பழமையான கோட்பாட்டை மாற்றியமைக்காமல், மிகவும் இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக போப் பிரான்சிஸ் வரலாற்றில் இடம் பிடிப்பார். மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார்.

திருச்சபைக்குள் பாரம்பரியவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதிலும், விசுவாசிகளின் நேசத்தை அதிக அளவில் பெற்ற சீர்திருத்த தலைவராக விளங்கியவர் போப் பிரான்சிஸ். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்களை, சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறியவர்களை, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை என விளிம்பு நிலை மக்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தவர் போப் பிரான்சிஸ். மனிதர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகளுக்கு சக மனிதர்களே காரணம் என எச்சரித்தவர் அவர்.

பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு அவர் ஆதரவாக நின்றார். எனினும், அத்தகைய பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மெதுவாக நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொண்டார்.

ஓர் எளிய நபராக இருந்தவர் போப் பிரான்சிஸ். சாதாரண அங்கிகளை அணிவதாகட்டும், ஆடம்பரமான அரண்மனைகளைத் தவிர்ப்பதாகட்டும், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை தானே எடுப்பதாகட்டும், கணவரை இழந்த பெண்கள், கைதிகள் போன்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகட்டும் அவர் என்றுமே எளிமையை விரும்புபவராகவும், எளிய மக்களோடு நிற்பவராகவும் இருந்துள்ளார். சமூக ஊடகங்கள் முதல் ஆபாசம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இளைஞர்களுடன் உரையாடிய போப் அவர். அதுமட்டுமல்ல, தனது உடல்நலம் குறித்து வெளிப்படையாகப் பேசியவர்.

2021-ல் அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்தது. ஜூன் 2023-இல் குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, முழங்கால் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு நுரையீரல்களிலும் உள்ள மூச்சுக்குழாய்களில் ஏற்பட்ட அழற்சி காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார் என மிக நீண்ட காலமாக ஊகங்கள் வெளிவந்தன. எனினும், அதனை திட்டவட்டமாக மறுத்தவர் போப் பிரான்சிஸ். போப்பாண்டவர் ராஜினாமா செய்வது “சாதாரண விஷயமாக” மாறக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

கைதிகளின் பாதங்களை முத்தமிட்ட போப்: வாட்டிகனில் தனது முதல் ஈஸ்டருக்கு முன்பு, ரோம் சிறையில் கைதிகளின் பாதங்களை அவர் கழுவி முத்தமிட்டார். போப் பிரான்சிஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக, இத்தாலிய தீவான லம்பேடுசாவைத் தேர்ந்தெடுத்தார். இதற்குக் காரணம், ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அந்த தீவுதான் நுழைவு வாயிலாக இருந்தது. உலகின் அலட்சியத்தையும் அதன் விளைவுகளையும் உணர்த்தவே அவர் இந்த தீவுக்குச் சென்றார்.

ட்ரம்ப்புக்குக் கண்டனம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் மெக்சிகோவுக்கு எதிராக எல்லைச் சுவரைக் கட்ட அவர் திட்டமிட்டார். இது கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தவர் போப் பிரான்சிஸ். மேலும், அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் வரலாற்று நல்லிணக்கத்தை எளிதாக்க உதவினார். 2018-ஆம் ஆண்டு பிஷப்புகளை நியமிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த அவர் முயன்றார்.

தன்பாலின ஈர்ப்பாளர் கத்தோலிக்கர்கள் விஷயத்தில், “தீர்ப்பளிக்க நான் யார்?” என்று கூறிய போப் அவர். விவாகரத்து பெற்ற மற்றும் மறுமணம் செய்து கொண்ட விசுவாசிகள் மத்தியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருநங்கை விசுவாசிகளின் ஞானஸ்நானத்தை அங்கீகரித்தார்.

கத்தோலிக்க படிநிலையின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர் வழிவகுத்தார். முதலில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் “சேரிகளின் பிஷப்” ஆகவும், பின்னர் பிஷப்களின் பிம்பத்தை உடைக்கும் போப்பாகவும் தன்னை நிறுவியவர் போப் பிரான்சிஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.