“ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல் பொய் வழக்கு…” – மோடி, அமித் ஷா மீது பவ்யா சாடல்

மதுரை: நேஷனல் ஹெரால்ட் வழக்கு பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பவ்யா நரசிம்ஹமூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் இன்று மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் வெங்கடராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துகொண்டு பவ்யா நரசிம்ஹமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: ”மத்திய பாஜக அரசின் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு இயக்கங்களை எதிர்கொள்ள முடியாமல் பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர். அதன்படி நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையாகும். இதுதொடர்பாக இந்தியா முழுவதும் 57 நகரங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊடகப்பிரிவு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி மதுரையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

பிரதமர் மோடி மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசை நடத்தி வருவதால் மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சிதான் இந்த வழக்கு. பாஜக அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் ராகுல் காந்தி வலிமையான தலைவராக உருவெடுத்து வருகிறார். அதனை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுபோன்று பொய்யான வழக்குகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை முடிந்துபோன நேஷனல் ஹெரால்டு வழக்குகளில் சேர்த்துள்ளனர். எதிர்க்கட்சிகளையும், எதிர்த்து குரல் எழுப்புவோரையும் பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை மூலம் முடக்கப் பார்க்கின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது தேர்தல் ஆணையத்தாலும், அமலாக்கத்துறையால் கைவிடப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது பாஜக உருவாக்கிய திசைமாற்றும் செயல். இந்த வழக்கில் பணமோ, சொத்துகளோ எதுவும் பரிமாற்றம் நடக்காத நிலையில் ஊழல் குற்றச்சாட்டு கூறுவது பொருத்தமற்றது. அமலாக்கத் துறையை மத்திய பாஜக அரசு தேர்தல் துறை போலவே மாற்றிவிட்டது. அதைப் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத் துறையின் வழக்குகளில் தண்டனை பெறுவது 1 சதவீதம் மட்டுமே, மீதி 99 சதவீதம் பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் பதிவு செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக் குடும்பத்தினரை பொய்யான வழக்குகள் பதிவு செய்து வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கிறது. ஜனநாயக முறையில் போராடுவோரின் குரலை ஒடுக்க நினைக்கும் அரசியல் மிரட்டலாகும். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணிய வைக்கமுடியாது. எங்களை பயமுறுத்த நினைப்பவர்கள்தான் தற்போது பயந்துபோய் உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.