புதுடெல்லி: வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்த உள்ளது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் பெரு நாடுகளுக்கு அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். முக்கிய வர்த்தக பங்குதாரர்களுடன் இருமுனை பேச்சுவார்த்தை முயற்சிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமையும்.
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி, ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் 2-வது சந்திப்பு, ஜிஎஸ்டிஆர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இந்த பயணத்தின்போது அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் அமெரிக்க பயணத்தின்போது, ட்ரம்ப் நிர்வாகத்தின் கருவூல செயலர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜெமிசன் கிரீர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளதை மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அதேநேரத்தில், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் தலைமை பேச்சாளர் ராஜேஷ் அகர்வால், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வாஷிங்டன்னுக்கு வருகை தருகிறார். இவரது பயணம் 90 நாட்களுக்குள் வர்த்தக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இலக்கை மையமாக கொண்டிருக்கும்.