புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைவதில் குடிமைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குடிமைப் பணிகள் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளை வழங்கினார். பிரதமர் தனது உரையில், “அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
நாம் உருவாக்கும் கொள்கைகள், எடுக்கும் முடிவுகள், அடுத்த ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். ஒரு ரதம் சக்கரமின்றி இயங்க முடியாது. அதுபோல், முயற்சியின்றி விதியை மட்டுமே நம்பி வெற்றி அடைய முடியாது. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதில் கூட்டு முயற்சியுடன் உறுதியான செயல்பாடுகள் அவசியம். இதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு மகத்தான பொறுப்பு உள்ளது. இதற்கான இலக்குகளை அடைவதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள குடிமைப்பணி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு குடிமைப்பணித் தினத்தின் மையக்கருத்து “இந்தியாவின் முழுமையான வளர்ச்சி” என்பதாகும். இது நாட்டு மக்களுக்கான உறுதிப்பாடு. இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது ஒவ்வொரு கிராமமும், குடும்பமும், குடிமகனும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும். உண்மையான முன்னேற்றம் என்பது சிறிய அளவிலான மாற்றங்கள் குறித்தது அல்ல. அது நாடு முழுவதும் முழு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தொழில்முனைவோருக்கு நிதியுதவி, கிராமப்புறங்களில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பயன்களை கிடைக்கச் செய்வது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது இந்த முழுமையான வளர்ச்சி. நிர்வாகத்தின் தரம் திட்டங்களைத் தொடங்குவது மட்டுமின்றி அவை எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைகிறது என்பதில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வேகமான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தொழில்நுட்பம் மற்றும் புதுமையான நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டியது அவசியம். இது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் அவற்றின் தாக்கத்தைக் காணமுடிகிறது.
இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் புதிய அளவுகோல்களை நிர்ணயித்து வருகிறது. ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்று நடத்தியது. ஜி 20 வரலாற்றில் முதல் முறையாக, 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது ஒரு பரந்த, உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்கியது. மக்களின் பங்கேற்புடன் ஜி-20 உச்சிமாநாடு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சிப் பெற்றது. இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. பிற நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது.
அரசின் செயல்திறன் குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியா பிற நாடுகளை விட 11 ஆண்டுகள் முன்னணியில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதங்களைக் குறைக்கவும், புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தவும், தொழில்நுட்பத்தின் வாயிலாக குறிப்பிட்ட காலத்தில் பணிகளை நிறைவேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
40,000-க்கும் மேற்பட்ட இணக்க நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. இது வர்த்தகத்தில் ஈடுபடுவதை எளிதாக்கி உள்ளது. 3,400-க்கும் மேற்பட்ட சட்ட விதிகள் குற்றமற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சிகளின் விளைவாக எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாநிலங்கள், மாவட்டங்கள், வட்டாரங்கள் சிவப்பு நாடா முறையை நீக்கி விட்டு இலக்குகளை எட்ட திறம்பட செயல்பட வேண்டும்.
செங்கோட்டையில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 உறுதிமொழிகள் குறித்து மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை, பாரம்பரியத்தின் பெருமிதம், ஒற்றுமையின் சக்தி, கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுதல் ஆகியவையே இந்த ஐந்து உறுதிமொழிகளாகும். இந்தக் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்பவர்களாக குடிமைப் பணி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
குடிமைப் பணி அதிகாரிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். குடிமைப்பணி அதிகாரிகள் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் போராட்டங்களைப் புரிந்துகொண்டு அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் நிர்வாகப் பணியுடன் அர்ப்பணிப்பு, கருணை, பொறுப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.