அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அக்ஷர்தாம் சூரியநாராயணன் கோயில், தாஜ்மஹால், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இத்தாலியில் தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா வருகிறார். ஜே.டி.வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகளுடன் வருகிறார். அவர்களுடன் அமெரிக்க குழுவினரும் வருகின்றனர்.
டெல்லியில் அவர்களை மத்திய அமைச்சர் ஒருவர் வரவேற்கிறார். இன்று இரவு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-க்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார். இந்திய குழுவினருடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இரு நாடுகள் இடையயான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓ ட்டலில் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் தங்குகின்றனர். டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோயில், இந்திய கைவினைப் பொருட்கள் விற்கப்படும் மார்க்கெட் ஆகியவற்றுக்கு வான்ஸ் குடும்பத்தினர் செல்கின்றனர். இன்று இரவு ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு அவர்கள் ராம்பாஹ் பேலஸில் தங்குகின்றனர். நாளை அவர்கள் அமீர் கோட்டையை பார்வையிடுகின்றனர்.
ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நாளை மாலை இந்திய குழுவினருடன் ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாளை மறுநாள் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை, வான்ஸ் குடும்பத்தினர் பார்வையிடுகின்றனர். ஷில்ப்கிராம் பகுதியில் உள்ள இந்திய கைவினைப் பொருட்கள் விற்கப்படும் திறந்தவெளி சந்தையையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். 24-ம் தேதி அன்று ஜெய்ப்பூரில் இருந்து ஜே.டி.வான்ஸ் அமெரிக்கா புறப்படுகிறார்.