சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.
குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்தது. தோனி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு 3 போட்டிகளில் 2-ல் சென்னை தோல்வியடைந்திருக்கிறது.
இன்னும் ஆறு போட்டிகள் மிஞ்சிருக்கும் நிலையில், அவையனைத்திலும் வெற்றிபெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கடினமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

மற்ற அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 7 போட்டிகள் ஆடி தங்களின் முழுமையான பிளெயிங் லெவனை கட்டமைத்துவிட்டது.
ஆனால், சென்னை அணி மட்டும்தான் இன்னுமே கூட பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் எந்த பிளேயரை உள்ளே இறக்குவது என்பதில் தடுமாறிவருகிறது.
ஏலத்தில் நிறைய ஆப்ஷன்கள் இருந்தும் சரியான வீரர்களை அணி நிர்வாகம் எடுக்காததே முக்கிய கரணம் என்று பலரும் சிஎஸ்கே-வை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
`சி.எஸ்.கே இவ்வாறு தடுமாறி நான் பார்த்ததில்லை’
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா, “மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரை நீங்கள் (சிஎஸ்கே நிர்வாகம்) விட்டுவிட்டீர்கள். ஏலத்தில் நல்ல வீரர்கள் நிறை பேர் இருந்தனர்.

இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் உட்பட ஒட்டுமொத்த அணி நிர்வாகமும், ஏலத்தில் நல்ல வீரர்களுக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் சி.எஸ்.கே-விடம் பணமும் இருந்தது. ஐ.பி.எல்லில் இதற்கு முன்பு சி.எஸ்.கே இவ்வாறு தடுமாறி நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.
மெகா ஏலம் மற்றும் இந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.