புதுடெல்லி: பிராமணர்களை விமர்சித்த சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், மன்னிப்பு கேட்ட பின்பும் பிரச்சினை தொடர்கிறது. அவரது முகத்தில் மை பூசுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என சர்ச்சைக்குரிய வகையில் ராஜஸ்தானின் சாணக்ய சேனா அறிவித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருப்பது சாணக்ய சேனா எனும் உயர் சமூக அமைப்பு. இது, திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், பிராமண சமூகத்துக்கு எதிராக தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்களை கண்டித்துள்ளது.
இதற்காக, திரையுலகப் பிரபலமான அனுராக் காஷ்யாப், பொதுவெளியில் மன்னிப்பும் கேட்டிருந்தார். இருப்பினும், அவரது முகத்தில் கருப்பு மை பூசினால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சாணக்ய சேனா அறிவித்துள்ளது. இது குறித்து சாணக்ய சேனாவின் புரவலரும் சர்வ பிராமண மகாசபையின் தேசியத் தலைவருமான பண்டிட் சுரேஷ் மிஸ்ரா, ‘காஷ்யப்பின் கருத்துக்கு சமூகத்தில் பெரும் கோபம் உள்ளது.
அவரது அறிக்கைக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் ஒருமனதாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அனுராக் முகத்தில் மையை பூசுபவருக்கு ரூ.1 கோடியை சாணக்ய சேனா அளிக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று உயர் சமூக அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், சாணக்ய சேனா, சர்வ பிராமண மகாசபை, பிராமண சேவா சங்கம், அகில இந்திய பிராமண மகாசபை, விஸ்வ பிராமண பரிஷத் மற்றும் அகில இந்திய பிராமண சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பிரபலமான சமூகத் தலைவர்களான விஷம்பர் தயாள் சர்மா, கே.என்.திவாரி, டாக்டர் கே.வி.சர்மா, பிரவீன் மிஸ்ரா, டாக்டர் ஆசாத் கௌசிக், நரிஷ்யந்த் சர்மா, டாக்டர் ஓம் சர்மா மற்றும் ஜிதேஷ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் முன்பாக உரையாற்றிய சர்வ பிராமண மகாசபையின் தேசியத் தலைவருமான பண்டிட் சுரேஷ் மிஸ்ரா, “பிராமணர் சமூகத்தைப் பற்றி ஆதாரமற்ற முறையில் அவதூறு பரப்பி, சமூகத்தில் எதிர்மறையைப் பரப்பும் அனுராக் காஷ்யப் போன்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
பிராமணர் சமூகம் அனைவரின் நலனுக்காகவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும் துறந்து, தவம் செய்து, தியாகம் செய்துள்ளது. இத்தகைய சிந்தனை கொண்டவர்களை சமூகத்தில் எதிர்க்க வேண்டும்.
அத்தகையவர்கள் அனைவரின் முன்னிலையிலும் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், அப்போதுதான் எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற செயலைச் செய்யத் துணிய மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.