அமைச்சர்களுக்கும் அரசு மீது அதிருப்தி: வானதி விமர்சனம்

சென்னை: திமுக அரசின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ‘டைடல் பார்க்’ எனப்படும் தொழில்நுட்ப பூங்காக்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இல்லாமல், தொழில்துறையின் கீழ் இருப்பது ஒரு அசாதாரணமான நிலை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்மூலம் எந்தெந்த துறைகள் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்தால் அந்த துறை மேம்படுமோ அது நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், அவர் ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? அவர் செய்த தவறு என்ன? அவருக்கு பெயரளவில் ஒரு அமைச்சகத்தைக் கொடுத்து, அதில் முறையான அதிகாரமோ, தேவைப்படக்கூடிய நிதியோ ஒதுக்கவில்லை என்றால், அது அந்த அமைச்சருக்கான தண்டனை தானே?

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குதல், அவற்றை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கான வாய்ப்புகள் தன்னிடத்தில் இல்லாததால் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிக்காட்டுகிறார். அந்தவகையில் இந்த திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.