இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். ஒரு கேப்டனாகவும் சரி பேட்ஸ்மேனாகவும் சரி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இத்தகைய மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ரோகித் சர்மா வர இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தலைமை வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரோகித் சர்மா குறித்து கடுமையாக விமர்சித்து உள்ளார் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். இது குறித்து பேசிய அவர், ஒரு தேசிய அணியின் கேப்டனாக இருப்பவர் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மனநிலையிலோ ஓய்வெடுக்கும் மனநிலையிலோ இருக்க கூடாது. இது முழுக்க முழுக்க அவரை பொறுத்தது. முடிவு அவர் கையில் தான் உள்ளது. அவரால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
அவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நான் இந்திய அணிக்கு கேப்டனாகவும், இந்தியாவுக்காக விளையாடவும் வேண்டுமா? அர்ப்பணிப்புக்காக தயாராக இருக்கிறேனா? உறுதியாக இருக்கிறேனா? நான் அதற்கான நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறேனா? என அவரையே அவர் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாட்டுக்காக விளையாடுவது கெளரவம் மற்றும் மரியாதை ஆகும். உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மனநிறைவுடனும் ஓய்வெடுக்கும் மனநிலையில் இருக்க முடியாது என அவர் தெரிவித்தார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயதாகிறது. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி உடன் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை அவர் செய்யவில்லை. அவர் 2027 வரை தொடர்வதாக தெரிகிறது. அவர் நடப்பு ஐபிஎல் போட்டியிலும் சரியாக விளையாடாத நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: சிஎஸ்கே-வின் புதிய பயிற்சியாளர் இவரா? காத்திருக்கும் குட் நியூஸ்!
மேலும் படிங்க: MI: மும்பை இந்தியன்ஸ் கனவை தகர்த்த கேகேஆர் அணி! இனி சிரமம் தான்!