மாஸ்கோ,
உக்ரைன் ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.ஆனாலும், ஈஸ்டர் தினத்திலும் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷியா முன்வந்துள்ளது. அதேவேளை, புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.