காஞ்​சிபுரம் மாவட்​டம் காரப்​பேட்​டை​யில் ரூ.250 கோடி​யில் அண்ணா புற்​று​நோய் ஆராய்ச்சி மையம்: அமைச்​சர் மா.சுப்பிரமணி​யன் தகவல்

சென்னை: ‘‘மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைப் போன்று புற்றுநோய் பாதிப்புகளுக்கான ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டையில் ரூ.250 கோடி செலவில், அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என, சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில், நேற்று சுகாதார துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நாட்டில் உள்ள 36 மாநிலங்களை விட தமிழகம் மிகப் பெரிய மருத்துவ கட்டமைப்புகளை பெற்றுள்ளது. தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 37 மாவட்ட அரசு மருத்துவமனைகள், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 22 இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனைகள், 15 மருத்துவக் கல்லூரி இணைப்புடன் கூடிய மருத்துவமனைகள், 3 பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 2 பன்னோக்கு மருத்துவமனைகள் என 11,876 மருத்துவக் கட்டமைப்புகள் உள்ள நாட்டில் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 56 சதவீதமாகவும், உள்நோயாளிகளின் எண்ணிக்கை 43 சதவீதமாகவும், அறுவை சிகிச்சைகள் எண்ணிக்கை 61 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், அரசின் மருத்துவ சேவையை பொதுமக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். திமுக அரசு பதவியேற்ற பிறகு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் வகையில், எம்ஐஆர் ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்ட 99,688 மருத்துவ உபகரணங்கள் ரூ.1,781 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உயர் வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை தொகுதி முன்பு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 22 இடங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சிடி ஸ்கேன் கருவிகள் தற்போது 135 இடங்களில் உள்ளது.

தமிழகத்தில் தொற்றா நோய் மூலம் ஏற்படும் இறப்பு விகிதம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மழைக் காலத்தின் போது 1.06 லட்சம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம், 56.08லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். மருத்துவ துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், கலந்தாய்வுகள் மூலம் பணி மாறுதல் பெற்றுள்ளோரின் எண்ணிக்கை 42,718 பேர்.

கரோனா காலத்தில் பணியாற்றிய 3,184 செவிலியர்களில் 2,160 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் ரூ.1,018 கோடி செலவில் கட்டப்பட்டு வரப்படுகிறது. இந்த மருத்துமனைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 11 மருத்துவ மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம், 4.04 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதனால், ஐ.நா.சபை தமிழக சுகாதார துறைக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் மையத்தைப் போன்று புற்றுநோய் பாதிப்புகளுக்கான ஆராய்ச்சி மையம் காஞ்சிரம் மாவட்டம், காரப்பேட்டையில் ரூ.250 கோடி செலவில், அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.