சென்னை: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என அத்தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியதாவது: தமிழகத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 3898 நீர்நிலைகள் உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி மற்றும் மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகள், அச்சிறுப்பாக்கம், இடைக்கழி நாடு, கருங்குழி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் 77 நீர்நிலைகள் உள்ளன. அங்கு தற்போது ரூ.211 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க முதல் கட்டமாக ரூ.750 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு நகராட்சியில் 4 நீர்நிலைகள் உள்ளன. இதில் ரூ.76.26 கோடி பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம் நகராட்சியில் 3 நீர்நிலைகள் உள்ளன. இதில் ரூ.9.50 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. மறைமலைநகர் நகராட்சியில் 35 நீர் நிலைகள் உள்ளன.
இதில் ரூ.300.57 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளில் 190 நீர்நிலைகள் உள்ளன. இதில் கருங்குழி உள்ளிட்ட பேரூராட்சிகளில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட திட்டங்கள் நிறைவடையும்போது, சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளை சென்றடையும். இதன் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்படும்.
செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய கொலவாய் ஏரி உள்ளது. இது நீர்வளத்துறைக்கு சொந்தமானது. அதில் சாக்கடை கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தி இருந்தேன். ரயில்வே சார்பில் பாதை அமைக்கும் போது நீர் வடியாத அளவுக்கு உயரமாக அடிப்படைக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த கொலவாய் ஏரியில் உள்ள நீரை வெளியேற்றி, சுத்தப்படுத்த முடியவில்லை. தண்ணீரை வடித்து தர ரயில்வே நிர்வாகத்திடம் கோரியும், நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள முக்கியமான 12 நீர்நிலைகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் தேர்ந்தெடுத்து, பூங்காக்கள், நடைபாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மறைமலைநகரில் உள்ள நீர்நிலைகளும் சீரமைக்கப்படும்.” என்று அவர் பதில் அளித்தார்.