ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் இன்று (ஏப்.22) பிற்பகல் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காடுகள், தெளிவான நீர் நிறைந்த ஏரிகள், பரந்த புல்வெளிகளுக்கு பெயர்பெற்ற இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் நெருக்கமாக இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு தகுதியானவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது. இந்த தாக்குதலை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு பிரிவில் சிறப்பு கவனம் செலுத்தி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உத்தரவிட்டார். ஊடுருவலுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளையும் அவர் வழங்கினார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். “இதுபோன்ற வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கண்டிக்கப்பட வேண்டியது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. இந்த அரிய சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும் முழுமையான விசாரணை தேவை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது, மேலும் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.