ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குலின் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சுற்றுலா தலமாக விளங்கும் பகல்காமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. “உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது குறித்து அரசு தரப்பில் உறுதி செய்யப்படும். அண்மைய ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது” என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்: “ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்… அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது தொடர்பாக அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். அந்த வகையில் கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல். சம்பந்தப்பட்ட மாநில அரசு தரப்பில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தலைவர்கள் இரங்கல், கண்டனம்: ‘அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது’ என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

“சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தீவிரவாத தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திப்பார்கள்” என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கெஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியுள்ளனர்.

தாக்குதலின் பின்னணி என்ன? – பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் இன்று (ஏப்.22) பிற்பகல் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காடுகள், தெளிவான நீர் நிறைந்த ஏரிகள், பரந்த புல்வெளிகளுக்கு பெயர்பெற்ற இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் நெருக்கமாக இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.