புதுடெல்லி,
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது:- நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை: இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இரு விதமான கருத்துக்களை கூறுகிறது.
நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது” என்றார். அண்மையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதிக்கும் காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்து உத்தரவிட்டது. அதாவது, மசோதா மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.