பக்சர்: ‘‘நாற்காலிக்காக கட்சி மாறுபவர் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்’’ என பக்சரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஹாரின் பக்சர் பகுதியில் அரசியல்சாசன பாதுகாப்பு கருத்தரங்கு என்ற பெயரில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1.25 லட்சம் கோடி தருவதாக கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அந்தப் பணம் எங்கே என பிரதமர் மோடியிடம் பிஹார் மக்கள் கேட்க வேண்டும்? பொய் சொல்லும் தொழிற்சாலையை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.
பாஜக.,வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஏழைகள், பெண்கள் மற்றம் பின்தங்கிய மக்களுக்கு எதிரானது. ஜாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை பிரிப்பதுதான் அவர்களுடைய கொள்கை. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு சதிக்கு உதாரணம் சமீபத்திய வக்பு சட்ட திருத்த மசோதா. இது மக்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி.
பிஹார் மாநிலத்துக்கு வளமான பாரம்பரியம் உள்ளது. இங்குதான் புத்தர் தவம் இருந்து ஞானோதயம் பெற்றார். சம்பரானில் மகாத்மா காந்தி சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். பல சிறந்த தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் பிஹாரில் பிறந்துள்ளனர். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.