நிர்வாகத்தில் அத்துமீறி நுழைவதாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரும் மனு தொடர்பான விசாரணையின் போது, “ நிர்வாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தையும், அதன் நீதிபதிகளையும் பாஜகவை சேர்ந்த சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர்.கவாயின் இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் காலக்கெடு விதித்தது. அதேபோன்று, மத்திய அரசு அமல்படுத்திய வக்பு திருத்த சட்டத்தில் சில பிரிவுகளை நிறுத்தி வைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு, குடியரசு துணைத் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்களும் உச்சநீதிமன்றத்தை கடுமையாக வார்த்தைகளால் விமர்சித்தனர்.

இந்த நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரியும், அமைதியை மீட்டெடுக்க துணை ராணுவப் படைகளை அனுப்பி வைக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “ இதைத் திணிக்க குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதுபோலவே நாங்கள் நிர்வாக அதிகாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்”: என்றார். இதையடுத்து, மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயின் இந்த கருத்து, நீதித்துறைக்கு எதிராக ஆளும் கட்சித் தலைவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.