புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அமர்வு முன்பு வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா கூறுகையில், “நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே பொறுப்பு என நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது மிகவும் தீவிரமான விஷயம்.” என்றார்.
அதற்கு நீதிபதி கவாய், “நீங்கள் என்ன தாக்கல் செய்ய விரும்புகிறீர்கள்? அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், “துபேக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய சக வழக்கறிஞர் ஒருவர், துபே மீது அவமதிப்பு நடவடிக்கைத் தொடங்க அனுமதிக்கக் கோரி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடகமணிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரச்சினை என்னவென்றால், சமூக ஊடகங்களில் உள்ள அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றாவது இன்று உத்தரவிட வேண்டும்.” என்று கோரினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை அடுத்தவாரம் விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்டது. முன்னதாக திங்கள்கிழமை துபேவின் கருத்துக்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று தெரிவித்திருந்தது.
“உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்.” என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார்.
அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதி எம்பி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம். நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் நாடாளுமன்றவாதியாக முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்.
நாட்டின் மதரீதியிலான போரை உச்ச நீதிமன்றம் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி உச்ச நீதிமன்றம் செல்கிறது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடிவிடலாம்.” என்று தெரிவித்திருந்தார்.