“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்டு ட்ரம்ப்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது தொடர்பாக அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.