பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், செஞ்சேரிமலையில் நேரிட்ட விபத்தில் சிக்கிய முதியவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து வரப்பட்டார்.
அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தடை ஏற்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால், அது இயங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நோயாளியுடன் வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா கூறும்போது, “பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டரை இயக்க பின்புறம் செல்ல வேண்டியிருந்ததால், சற்று தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், ஜெனரேட்டா் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உரிய முறையில் பராமரித்து, மின்தடை ஏற்பட்டால் நோயாளிகள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.