தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி உள்ளே நுழைந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் பாஸ்கர், மாவட்ட துணைத் தலைவர் முரளி, பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம், ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் மீது 12 பிரிவுகளில் பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கும் அதன் பின்னர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் இன்று (ஏப்.22) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலயம் தமிழக அரசால் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பூட்டப்பட்டது. இந்து கலாச்சாரத்தின்படி கட்டப்பட்ட ஆலயத்தை வழிபாட்டுக்கு உரிய இடம் இல்லை என்று கூறி பூட்டினார்கள். 2022-ம் ஆண்டு அதே தேதியில் பாரத மாதா ஆலயத்தில் பாஜக சார்பில் மாலை அணிவித்தோம். அப்போது தமிழக அரசு தடுத்ததால் ஏற்பட்ட பிரச்சினை தான் இந்த வழக்கு. இந்த வழக்கில் இன்று நீதி வென்றுள்ளது. பாரத மாதாவின் விலங்கு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அனைத்து பிரிவுகளும் தவறானவை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு புனையப்பட்ட வழக்கு என மறைமுகமாக நீதிபதி கூறியுள்ளார். பாரத மாதா ஆலயம் உலகம் முழுக்க உள்ள மக்களும் அறியும் வகையில் புனரமைக்கப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இங்கே வந்தபோதும் இதை கூறியிருந்தார்.
பாரத மாதா ஆலயம் உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்புக்குள் வர வேண்டும். தமிழக அரசோ, செய்தித் துறையோ தன் கட்டுப்பாட்டில் இதுபோன்ற இடங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது எங்கள் விருப்பம்,” என்று அவர் கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.