வாடிகன் சிட்டி,
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.பின்னர் தனது பெரும்பாலான பணிகளை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். வாடிகனில் சமீபத்தில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் உயிர்ப்பு பெருவிழா பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார். குறிப்பாக ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.
அவருக்கு நேற்று காலையில் திடீரென உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.அவரது மரணத்தை வாடிகன் உறுதி செய்தது. போப் பிரான்சிசின் மரணத்தை கர்தினால் (கார்டினல்) கெவின் பாரெல் அறிவித்தார்.உடனே ரோம் நகரம் முழுவதிலும் உள்ள அனைத்து ஆலயங்களின் மணிகளும் ஒலிக்க விடப்பட்டன. வாடிகன் முழுவதுமே சோகத்தில் ஆழ்ந்தது. போப் பிரான்சிஸ் மறைவையடுத்து இந்தியாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் வைத்து இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத்தெரிகிறது.
இதற்கிடையே இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.