புதுடெல்லி: போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக இருந்த பிரான்சிஸ், நேற்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 அன்று காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
ஏப்ரல் 22 (செவ்வாய்) மற்றும் ஏப்ரல் 23 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
அரசு துக்கக் காலத்தில், இந்தியா முழுவதும் தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.