2 வாரத்தில் திருமணம்.. முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தை சேர்ந்தவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக வேலை செய்து வந்தார். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். சாய்ராபானுவுக்கும் ஒரு வாலிபருக்கும் அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருமணத்திற்கான வேலைகளில் சாய்ராபானுவின் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சாய்ராபானு பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சாய்ராபானு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் கதக் புறநகர் போலீசார் விரைந்து சென்று சாய்ராபானுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனது சாவுக்கு முன்னாள் காதலன் மைலாரி தான் காரணம் என்று கூறி இருந்தார். நானும், மைலாரியும் காதலித்தோம். 5 ஆண்டுக்கு முன்பாக எங்களது காதல் முறிந்து விட்டது.

எனக்கு திருமணம் முடிவான பின்பு, மைலாரியை காதலிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிட போவதாக மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்வதாக கூறி இருந்தார். அதன்பேரில், மைலாரி மீது கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.