Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜராத் எப்படி சாதித்தது?

‘குஜராத் தொடர் வெற்றி!’

ஈடன் கார்டனில் வைத்து கொல்கத்தாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது குஜராத் அணி. நடப்பு சீசனில் அந்த அணி பெறும் 6 வது வெற்றி இது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். குஜராத் அணி எப்படி தொடர்ந்து வெல்கிறது? அந்த அணியின் சக்சஸ் பார்முலாதான் என்ன?

Gill - Rahane
Gill – Rahane

‘அண்டர்டாக்ஸ் இமேஜ்!’

சீசனின் தொடக்கத்தில் குஜராத் அணியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா வெளியேறிய பிறகு அந்த அணி தடுமாறிக் கொண்டிருந்தது. கடந்த சீசனில் கில் முதல் முறையாக கேப்டனாகியிருந்தார். நிறைய தோல்விகள். கில்லும் சுமாராகத்தான் கேப்டன்சி செய்திருந்தார்.

Gujarat Titans
Gujarat Titans

மேலும், மெகா ஏலத்துக்குப் பிறகும் அந்த அணியில் பெரிதாக ஈர்க்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் வீரர்களென யாருமே இல்லை. இருப்பதிலேயே பட்லர் மட்டும்தான் அதிக புகழ்மிக்க வீரர். இதனாலயே அவர்கள் மீது ஒருவித Underdogs இமேஜ் உண்டாகியிருந்தது. ஆனால், சீசன் தொடங்கியவுடன் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வியக்க வைத்துவிட்டனர்.

‘ப்ளெம்மிங்கின் கூற்று!’

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டிக்கு முன்பாக வான்கடே மைதானத்தில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அப்போது, ‘இங்கே ஒரு சீசனில் நீங்கள் வலுவான போட்டியாளர்களாக இருக்க வேண்டுமெனில் உங்களின் டாப் 3-4 பேட்டர்கள் மட்டும் 75% ரன்களை அடித்துக் கொடுக்க வேண்டும். அது நடந்திருக்கும் அணிகள் மட்டும்தான் இப்போது பள்ளிப்பட்டியலில் மேலே இருக்கின்றன. டாப் ஆர்டர் வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தத் தொடரில் சவாலளிப்பது கடினம்.’ எனப் பேசியிருந்தார்.

Sai Sudharsan
Sai Sudharsan

குஜராத் அணியை மனதில் வைத்துதான் ப்ளெம்மிங் அப்படி பேசியிருந்தார். அந்த அணியின் டாப் 3 வீரர்கள் ஆதிக்கமாக ஆடுவதுதான் அவர்களின் சக்சஸ் பார்முலா. நடப்பு சீசனில் அதிக ரன்களை அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் சாய் சுதர்சன் இருக்கிறார்.

அதேமாதிரி, முதல் 10 இடங்களுக்குள் மொத்தமாக 3 குஜராத் வீரர்கள் இருக்கிறார்கள். சாய் சுதர்சன், கில், பட்லர் என அந்த மூன்று வீரர்களுமே குஜராத் அணியின் டாப் 3 வீரர்கள்.

‘கலக்கும் டாப் 3’

குஜராத் அணி ஆடியிருக்கும் 8 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 1550 ரன்களை எடுத்திருந்தது. இதில், இந்த மூவர் மட்டுமே 1078 ரன்களை எடுத்திருக்கின்றனர். ப்ளெம்மிங் சொன்ன கூற்றுப்படி சதவீதமாக பார்த்தால் அணி மொத்தமாக எடுத்திருக்கும் ரன்களில் 69.5% ரன்களை இவர்கள் மட்டுமே எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். சாய் சுதர்சன் 417 ரன்களையும் பட்லர் 356 ரன்களையும் கில் 305 ரன்களையும் எடுத்திருக்கின்றனர்.

Gill
Gill

இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளிலும் குறைந்தபட்சமாக இந்த டாப் 3 பேட்டர்களில் ஒருவராவது அரைசதத்தை கடந்திருக்கின்றனர். மூவருமே ஒன்றாக சேர்ந்து சொதப்பிய போட்டிகளென எதுவுமே இல்லை. அதேமாதிரி, சாய் சுதர்சன் – கில் ஓப்பனிங் கூட்டணி 8 போட்டிகளில் 2 முறை 50 ரன்களையும் 2 முறை 100 ரன்களையும் கடந்திருக்கிறது.

Gill & Buttler
Gill & Buttler

அதேமாதிரி, கில்லோ அல்லது சுதர்சனோ பட்லரோடு இணைந்து 2 வது விக்கெட்டுக்கு மட்டும் 6 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர்.

இந்த அளவுக்கு வலுவாக ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர் வேறு எந்த அணியிலும் இல்லை. ஒட்டுமொத்த பேட்டிங் பொறுப்பையும் இவர்கள் மூவரும் மட்டுமே எடுத்துக் கொண்டு கலக்கிவிடுகின்றனர்.

Buttler
Buttler

தேவைப்படும்பட்சத்தில் ரூதர்போர்டு, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் போன்றோரும் இக்கட்டான சூழலில் ரன்களை சேர்த்து கொடுக்கின்றனர்.

‘பௌலிங்கிலும் மூவர் ஆதிக்கம்!’

பௌலிங்கில் ரஷீத் கான் தான் அந்த அணியின் ஸ்டார் பௌலர். அவர் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சமீபமாக ஐ.பி.எல் இல் அவரின் பார்ம் சரியில்லை. கடந்த சீசனிலேயே சுமாராகத்தான் வீசியிருந்தார். அந்த சறுக்கல் இந்த சீசனிலும் தொடர்கிறது.

Sai Kishore
Sai Kishore

ஆனாலும் அவர்களின் பௌலிங்கில் சுணக்கம் இல்லை. காரணம், மற்ற பௌலர்களெல்லாம் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகின்றனர். எப்படி ஆரஞ்சு தொப்பி குஜராத் அணியிடம் இருக்கிறதோ அதேமாதிரியே அதிக விக்கெட்டுக்கான பர்ப்பிள் தொப்பியும் குஜராத் அணியிடம்தான் இருக்கிறது. பிரஷித் கிருஷ்ணா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

Prasidh Krishna
Prasidh Krishna

டாப் 10 விக்கெட் டேக்கர்களில் குஜராத் அணியின் மூன்று பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சாய் கிஷோரும் சிராஜூம் தலா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். சிராஜ் பவர்ப்ளேயை பார்த்துக் கொள்கிறார். ரஷீத் கானிடமிருந்து வராத விக்கெட்டுகள் சாய் கிஷோரிடமிருந்து வருகின்றன.

ஆடுகிற 11/12 பேரில் 6 வீரர்கள் சீசனிலேயே சிறந்த பெர்பார்மென்ஸை கொடுக்கும் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். அப்படியிருக்க ஒரு அணி சொதப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

Sai Sudharsan
Sai Sudharsan

தமிழக வீரர்களின் செயல்பாடையும் இங்கே தனியாக குறிப்பிட்டாக வேண்டும். சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 5 அரைசதங்களை அடித்திருக்கிறார். நவீன டி20 இல் அவர் அளவுக்கு Consistency யோடு ஆடும் வீரர்கள் ரொம்பவே குறைவு. இன்னொரு பக்கம் சாய் கிஷோர் துணிச்சலாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி வருகிறார்.

இருவருமே அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். இவர்கள் போக ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் போன்றோரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான செயல்பாட்டை கொடுத்துவிடுகின்றனர்.

Gill
Gill

எல்லாவற்றுக்கும் அந்த அணியின் மீதிருக்கும் ‘Underdog’ இமேஜூம் அவர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. பவுண்டரி லைனிலேயே நிற்கும் பயிற்சியாளர் நெஹ்ராவையும் இங்கே பாராட்டியே ஆக வேண்டும். ஹர்திக் அணியை விட்டு சென்ற ஒரு சீசனிலேயே மீண்டும் குஜராத் அணியை எழுச்சிப் பாதைக்கு அழைத்து வந்துவிட்டார்.

குஜராத் அணி சைலண்ட்டாக சம்பவம் செய்யப்போவதைப் போல தோன்றுகிறது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.