Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

தீவிரவாதிகளின் இத்தகைய கொடூர சம்பவத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியிலிருந்து உடனடியாக ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்று முதல்வர் உமர் அப்துல்லா உட்பட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மறுபக்கம், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல். சந்தேகத்திற்கு இடமின்றி இது கண்டிக்கப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது முற்றிலும் மன்னிக்க முடியாதது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி

பிரதமர் மோடி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது. அது மேலும் வலுவடையும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி:

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் உயிரிழந்த மற்றும் காயமடைந்த செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனவேதனைக்குரியது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது.

ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை நார்மலாகிவிட்டது என்று வெற்றுக் கூற்றுகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காமல், அப்பாவி இந்தியர்கள் உயிரிழக்காமல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காமல், அப்பாவி இந்தியர்கள் உயிரிழக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்:

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பலரின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த தீவிரவாதத் தாக்குதலானது, மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள குடியுரிமை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:

பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருக்கிறேன். நமது நாட்டில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மநீம தலைவர் கமல்ஹாசன்:

பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. மேலும், காயமடைந்தவர்களுக்கு மீண்டுவருவதற்கான வலிமை கிடைக்க விரும்புகிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.