Pahalgam Terror Attack: காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அரசுமுறைப் பயணமாக சவுதி சென்றிருக்கும் பிரதமர் மோடி, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் காணொளிக் காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இரவு 9 மணியளவில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் அமித்ஷா. ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர், முதல்வர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித் ஷா விரிவான ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.